அரசியல் கட்சிகளுக்கு இடையே பிளவுபடுத்த பிரதமர் மோடிக்கு போதுமான நேரம் உள்ளது. ஆனால் ஆயுதப்படைகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு நேரமில்லையா என அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.
நாள் தோறும் தேசியம் பற்றி பேசுபவர்கள் நமது ஆயுதப்படைகளுக்கு துரோகம் இழைத்துள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டி உள்ளார்.
ஆயுதப்படை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகளில் 2 லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவித்த மல்லிகார்ஜுன கார்கே, அக்னிபாத் திட்டம் என்பது நமது ராணுவ வீரர்களுக்கு வழங்க மோடி அரசிடம் போதுமான நிதி இல்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வது என கூறியுள்ளார்.
ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்தை நடைமுறைப்படுத்தலில் பாதுகாப்பு சமூகத்திற்கு மோடி அரசு துரோகம் இழைத்துள்ளதாக விமர்சித்த மல்லிகார்ஜுன கார்கே, ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் 2-ல் பெரிய அளவிலான முரண்பாடுகளைத் தூண்டுவதன் மூலம், நமது ராணுவத்தினரிடையே பிளவை உருவாக்கியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.