நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி மதுரை மாவட்டத்தில் மர்நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுக்கா, கருவேலம்பட்டி ரயில்வே கேட் பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தகவல் அறிந்த ஆஸ்டியன்பட்டி போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றனர். ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த நபரின் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸாரின் நடத்திய விசாரணையில், அவர் நெல்லை மாவட்டம், பாளையசெட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பதும் அவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் உள்ளது என்பதும் தெரியவந்தது. நெல்லை மாவட்டத்தில் பிரபல ரவுடியாக வலம் வந்த கிருஷ்ணகுமாருக்கு ஏற்கெனவே விரோதிகள் உள்ளதால் அவர் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதற்கிடையே கிருஷ்ணகுமார் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்துள்ள போலீசார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உத்தரவின்பேரில், தனிப்படை போலீஸார் தலைமறைவாக உள்ள கொலையாளிகளை தேடி வருகின்றனர்.