பாகுபலி யானையின் உடல் நிலை சீரடைந்து வருவதால் அதனை தொடர்ந்து கண்காணித்து வந்த சிறப்பு வனக்குழுக்கள் விலக்கி கொள்ளப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக பாகுபலி என்ற ஒற்றை ஆண் காட்டுயானை சுற்றித்திரிந்து வருகிறது. இந்த யானையின் வாய்ப்பகுதியில் காயம் ஏற்பட்டு இருந்ததால் அதற்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் பல்வேறு வழிகளில் முயற்சி செய்தனர்.
முதுமலை முகாமில் இருந்து வரவழைக்கப்பட்ட 2 கும்கி யானைகள் தயார் நிலையில் இருந்து பாகுபலி யானையை வனத்துறையினரால் நெருங்க முடியவில்லை. அடிக்கடி தனது இருப்பிடத்தை வேகமாக மாற்றிக் கொண்டிருந்த பாகுபலி யானையை மயக்க ஊசி செலுத்தி சிகிச்சையளிப்பதும் சவாலான காரியமாக இருந்தது.
இதற்கிடையில் 40க்கும் மேற்பட்ட வனத்துறை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய 6 குழுக்கள் பாகுபலி யானையை தொடர்ந்து கண்காணித்து வந்ததில், தற்போது யானையால் உணவு மற்றும் நீர் அருந்த முடியாத அளவுக்கு காயம் ஒன்றும் பெரிதாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யானையின் செயல்பாடுகள் வழக்கம் போல் இருப்பதாகவும், இயற்கையாகவே காயம் குணமாகி வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து யானையை கண்காணித்து வந்த 6 குழுக்களும், முதுமலை முகாமில் இருந்து வரவழைக்கப்பட்ட 2 யானைகளும் திரும்பப் பெறப்படுவதாக வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.