ஆன்லைனில் ஒடிபி கேட்பது, ரம்மி ஆடி லட்சாதிபதி ஆகலாம் என்பது வரிசையில் ஆன்லைனில் வேலை செய்தால் பணம் கொட்டும் என்ற மோசடி இந்தியாவில் களைகட்ட தொடங்கியுள்ளது.
எத்தனை சதுரங்கவேட்டை படம் பார்த்தாலும், அரசாங்கம் எவ்வளவு விழிப்புணர்வு செய்தாலும், பெற்றோர் நண்பர்கள் அறிவுறுத்தினாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் தான் எடுத்த முடிவுதான் சரி என்று எண்ணிய பெண்மணி ஒருவர் வாயை கட்டி வயிற்றை கட்டி சேமித்து வைத்த தனது பணத்தை இழந்துள்ளார்.

ஏழை எளியவர்களுக்கு பணத்தாசையை தூண்டி அவர்களின் சேமிப்பை எப்படி சுரண்டலாம் என்பதை கற்றுக் கொடுக்க வடமாநிலங்களில் டுடோரியல் கல்லூரிகள் செயல்படுகின்றன என்பது அப்பாவி மக்கள் பலர் அறிந்திடாத ஒன்று.
காலையில் செல்போனை ஆன் செய்தால் நண்பர்களிடம் இருந்து வாட்ஸ்அப் மெசேஜ் வருகிறதோ இல்லையோ மோசடி மன்னர்களிடம் இருந்து குறுஞ்செய்திகள் அழைய விருந்தாளியாக உங்கள் செல்போனை நிரப்பிவிடும்.

ரம்மி ஆடினால் கோடீஸ்வரன் ஆகலாம், விளம்பரங்களை பார்த்தால் போதும் பணம் கொட்டும், வீட்டிலிருந்து வேலை தினமும் 10 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம், 1 லட்சம் ரூபாய் கட்டினால் ஒரே நாளில் 2 லட்சம் ரூபாய் கிடைக்கும், வாகனத்தில் முதலிடு செய்தால் மாதம் தோறும் இரட்டிப்புப் பணம் கிடைக்கும், கம்ப்யூட்டரில் டேட்டா எண்ட்ரி செய்தால் ஒரு பக்கத்திற்கு 100 ரூபாய் கிடைக்கும், வீட்டில் தனிமையில் இருக்கும் வசதி படைத்த பெண்களை திருப்திபடுத்தி பணம் சம்பாதிக்கலாம் போன்ற மோசடிகள் தொடர்பான போலி வாக்குறுதிகள் உங்களின் ஆசையை தூண்டும்.
சதுரங்க வேட்டை திரைப்படத்தில் கதாநாயகன், “ஒருவனை ஏமாற்ற வேண்டும் என்றால் முதலில் அவன் ஆசையை தூண்ட வேண்டும்” என்று வசனம் பேசுவார். இதையே தாரக மந்திரமாக எடுத்துக் கொண்டு வடமாநிலத்தில் வசிக்கும் சில சோம்பேறிகள் ஏழைகளின் ஆசையை தூண்டி ஏமாற்றி பணம் சம்பாதிக்கின்றனர்.
களவும் கற்று மற என்ற பழமொழியை வேறு மாதிரியாக புரிந்துக் கொண்ட வட மாநில படித்த அறிவாளிகள் சிலர்தான் இந்த மோசடிகள் எல்லாமே செய்கின்றனர்.
இவர்களை நம்பிய நம் தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கியை அடுத்த கோட்டை பகுதியை சேர்ந்த சிந்து என்பவர் தனது சேமிப்பு பணம் 8 லட்சம் ரூபாயை இழந்துவிட்டு மனஉளைச்சலில் காவல் துறையை நாடியுள்ளார்.

சிந்து எப்படி ஏமாந்தார் தெரியுமா? சிந்துவின் செல்போனுக்கு சில நாட்களுக்கு முன் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் வீட்டிலிருந்து கம்ப்யூட்டரில் வேலை செய்தால் தினமும் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.20,000 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என்பது தான் அது. ஆசை யாரை விட்டது? ஏற்கனவே வேலையில்லாமல் அவதிப்பட்டு வந்த சிந்துவுக்கு இந்த செய்தி ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. இது சம்பந்தமாக பெற்றோர், உறவினர், நண்பர்கள் யாரிடமும் ஆலோசிக்கவில்லை மர்ம நபர் அனுப்பிய லிங்கை கிளிக் செய்து முதலில் பதிவு கட்டணம் 200 ரூபாய் செலுத்தியுள்ளார் மறுநாளே அவருக்கு 300 ரூபாய் கிடைத்துள்ளது உடனே மகிழ்ச்சி அடைந்த சிந்து அதிக பணம் கட்டியுள்ளார்.
ஆனால் பணம் திரும்ப வில்லை பணம் நிச்சயம் கிடைத்துவிடும் என்று மர்ம நபர் அனுப்பிய வாக்குறுதியை நம்பி 8 லட்சம் ரூபாய் வரை செலுத்தியுள்ளார். நாட்கள் கடந்தது எதிர்தரப்பில் எந்தவித பதிலும் இல்லை. இப்போது தான் இதுகுறித்து தன்னை சுற்றி இருக்கும் சக மனிதர்களிடம் விசாரித்துள்ளார் சிந்து. அவர்கள் அனைவருமே சிந்துவுக்கு அதிர்ச்சி தரும் வகையில் ஒரு விஷயத்தை கூறியுள்ளனர். அது என்னவென்றால் தங்களுக்கும் இது போன்ற அழைப்புக்கள் வந்தது என்றும் ஆனால் அவை எல்லாமே மோசடி என்றும் தெரிவித்தனர். இதை கேட்ட சிந்து கண்ணீரும் கம்பலையுமாய் காவல் நிலையத்தை நாடியுள்ளார்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, இந்த மோசடி மன்னர்கள் மக்களை ஏமாற்றுவதற்கு இணையதளத்தை பயன்படுத்துவதால் அவர்களை அடையாளம் கானுவது சிரமம். அவர்கள் பயன்படுத்தும் செல்போனும் போலி முகவரியிலோ, அல்லது இறந்தவர்களின் பெயரிலோ இருக்கும் என்கிற அதிர்ச்சி தகவல்கள் தருகிறார்கள்.
எனவே இனிமேலாவது இளைய தலைமுறையினர் இது போன்ற மோசடிகளை நம்பாமல் 100 ரூபாய் சம்பாதித்தாலும் உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும். நாள் முழுக்க உழைத்தாலும் 1000 ரூபாய் தான் சம்பாதிக்க முடியும் என்கிற சூழ்நிலை இருக்கும் போது முகம் தெரியாதவன் எப்படி தினமும் 20 ஆயிரம் ரூபாய் தருவான் என்பதை சிந்திக்க வேண்டும்.
இதுபோன்ற சைபர்கிரைம் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு பணத்தை இழந்த சிந்துவுக்கு உடனே நீதி கிடைக்குமா என்பது நமக்கு தெரியாது. ஆனால் புதிய திரைப்படத்திற்கு கதையை தேடும் இளம் இயக்குனர்களுக்கு இது போன்ற மோசடிகள் சதுரங்க வேட்டை படத்தின் அடுத்த பாகத்தை எடுப்பதற்கு கதை கரு கிடைத்துவிட்டது என்பதே நிதர்சனமான உண்மை.