ஆந்திராவில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டு மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ள சம்பவம் வேலூரில் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் யானமாலா ஆனந்த். தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த ஆனந்த் கடந்தவாரம் பணி முடித்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினார். பங்காருபாளையத்தில் விபத்தில் சிக்கிய ஆனந்த் அருகில் உள்ள வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், ஆனந்த்தின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் அடையாத நிலையில் அவருடைய மூளை தனது செயல்பாட்டினை நிறுத்திக்கொண்டது. இதையடுத்து அவர் உயிர்பிழைக்க வாய்ப்பில்லை என மருத்துவர் தெரிவித்ததால், ஆனந்த்தின் உடல்உறுப்புகளை பிறருக்கு தானமாக வழங்க அவரது உறவினர்கள் சம்மதித்தனர். பின்னர் ஆனந்த்தின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு, பிற மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு பொருத்துவதற்காக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் ஆனந்த்தின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெற்றது. வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையை பொறுத்தவரை அதிக அளவில் உடல் உறுப்புகள் தானமாக பெறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.