தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து படகுகள் மூலம் இலங்கைக்கு கஞ்சா, வலி நிவாரணி மாத்திரைகள், போதை மாத்திரைகள், கடல் அட்டை போன்றவை கடத்தபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதை அடுத்து இன்று அதிகாலை மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பெரியபட்டினம் தெற்கு புது குடியிருப்பு கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது இலங்கைக்கு செல்ல இருந்த படகு ஒன்றை சோதனை இட்டபோது அதில் 12 பெட்டிகளில் வலி நிவாரணி மாத்திரைகள் இருந்ததை கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து பெரிய பட்டினத்தை சேர்ந்த முகமது மீராசா என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக பதிவு எண் இல்லாத அந்த படகை பயன்படுத்தியதாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து புதுமடம் கடலோர பாதுகாப்பு குழும காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.