24 மணிநேரமும் வணிக நிறுவனங்கள் செயல்படலாம் என்ற தமிழக அரசின் அரசாணையை கடைபிடிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு பால் முகவர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு பால்முகவர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
குழந்தைகள், வயதானவர்களுக்கு எளிதில் செரிமானம் ஆகக்கூடிய, அனைத்து தரப்பு பொதுமக்களுக்கும் அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் விநியோகம் என்பது தமிழகம் முழுவதும் பெரும்பாலும் இரவு நேரங்களில் தான் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வாறு இரவு நேரங்களில் நடைபெறும் பால் விநியோகப் பணிகளை மேற்கொள்ளும் வாகனங்களை மறித்தும், காவல் ரோந்து செல்லும் போது அதிகாலை வேளையில் திறந்திருக்கும் பால் கடைகளிலும் பால் பாக்கெட்டுகளை கையூட்டாக கட்டாயப்படுத்தி கேட்டு வேலியே பயிரை மேய்ந்த கதை போல செயல்பட்டு பால் முகவர்கள் பலருக்கும் இடையூறு அளிப்பதில் காவல்துறையினருக்கு ஈடு இணை வேறு எவருமில்லை எனலாம்.
அந்த வகையில் மதுரை கே.கே.நகர் பகுதியில் சுமார் 50ஆண்டுகளுக்கும் மேலாக பால் விற்பனையில் ஈடுபட்டு வரும் பால் முகவர் திரு. சிவராஜ் என்பவர் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு எந்த நேரமாயினும் பால் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் தனது பால் கடையை இரவு முழுவதும் திறந்து வைத்து பால் வியாபாரம் செய்து வந்ததை செய்ய விடாமல் தடுத்து காவல்துறை தரப்பில் இரவில் 11.00மணிக்கு மேல் கடையை மூடச் சொல்லி தொந்தரவு செய்து வந்ததோடு, பால் விற்பனை செய்வதற்கு பெரும் தடையாக இருந்துள்ளதால் அதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார். ஆனால் அவர் அனுப்பிய புகார் மனு மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.
இதனால் மனம் சோர்ந்து போகாமல் மதுரை உயர்நீதிமன்ற கிளையை அணுகி தொழில் நிறுவனங்கள் 24மணி நேரமும் செயல்படலாம் என கடந்த 02.06.2022ல் தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டிருக்கும் போது அந்த அரசாணையை மதிக்காமலும், அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பாலினை விற்பனை செய்யும் எங்களது பால் கடையை மூடச்சொல்லியும் காவல்துறையினர் கட்டாயப்படுத்துகின்றனர். எனவே எங்களது பால் கடையை 24மணி நேரமும் செயல்பட அனுமதிக்கவும், தமிழக அரசின் அரசாணையை மதிக்காத காவல்துறையினருக்கு அதனை அமுல்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் கூறி வழக்கு தொடர்ந்துள்ளார்.
பால் முகவர் திரு. சிவராஜ் அவர்கள் தொடுத்த வழக்கின் அடிப்படையில் விசாரணை நடத்திய மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதியரசர் திரு. ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அரசாணையின்படி பால் கடையை 24மணி நேரமும் திறந்து வைத்து பால் வியாபாரம் செய்யலாம் எனவும், காவல்துறையினர் அதில் தலையிடக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வரவேற்கிறது.
காவல்துறையினரின் அத்துமீறல், அடக்குமுறையை கண்டு அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் விற்பனையை முடக்கிக் கொள்ளாமல் மக்கள் சேவைக்காக நீதிமன்றத்தின் கதவை தட்டி தீர்வு கண்ட பால் முகவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்துள்ள திரு. சிவராஜ் அவர்களுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், நல் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.