சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரும், உத்தரப்பிரதேச முதலமைச்சருமான முலாயம் சிங் யாதவ் உடல் நலக் குறைவால் இன்று காலை காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.
மிகச்சாதாரண குடும்பத்தில் பிறந்து இராம்மனோகர் லோகியாவின் மாணவராக அரசியல் பயின்ற முலாயம் சிங் யாதவ் இந்திய அரசியலில் பதித்த முத்திரைகள் எண்ணற்றவை. 22 ஆண்டுகளுக்குப் பிறகு 1989-ஆம் ஆண்டில் மத்தியில் காங்கிரஸ் அல்லாத அரசை வி.பி.சிங் தலைமையில் அமைக்க பாடுபட்டவர். பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் உழைத்தவர். உத்தரப்பிரதேச முதலமைச்சராகவும், மத்திய பாதுகாப்பு அமைச்சராகவும் சாதனைகளை படைத்தவர்.
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்குவதற்காக நான் மேற்கொண்ட முயற்சிகளுக்கு முழுமையான ஆதரவு வழங்கியவர். 2000-ஆவது ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி தில்லியில் நடைபெற்ற அகில இந்திய சமூகநீதி மாநாட்டில் மறைந்த மத்திய அமைச்சர் இராஜேஷ் பைலட்டுடன் இணைந்து தேசிய பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் தலைவராக என்னை தேர்ந்தெடுக்க முன்மொழிந்தவர். எனது 33 ஆண்டு கால சமூகநீதி தோழர்.
முலாயம் சிங் யாதவின் மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் பெரும் இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் புதல்வர் அகிலேஷ் சிங் யாதவ் மற்றும் குடும்பத்தினருக்கும், சமாஜ்வாதி கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.