ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே மாணவியை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 2 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொல்லபாளையம் கிராமத்தில் கடை நடத்தி வரும் முனியாண்டி மற்றும் சந்திரன் இருவரும் நண்பர்கள். அதே பகுதியில் வசிக்கும் ஒரு தம்பதி 9ம் வகுப்பு படிக்கும் மகளை வீட்டில் தனியாக விட்டுவிட்டு கூலி வேலைக்கு செல்வது வழக்கம். தனியாக இருப்பதை கவனித்த முனியாண்டி மற்றும் சந்திரன் இருவரும் மாணவி வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு சிறுமியை மிரட்டி இருவரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது மட்டுமின்றி இந்த விஷயத்தை வெளியில் கூறினால் மாணவியின் பெற்றோரை கொன்றுவிடுவதாக மிரட்டி உள்ளனர்.
இதனால் பயந்து போன மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியில் சொல்ல முடியாமல் தவித்து வந்துள்ளார். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட குற்றவாளிகள் மாணவி வீட்டில் தனியாக இருக்கும் போதேல்லாம் அடிக்கடி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
கடந்த சில தினங்களாக இந்த கொடுமை நடந்து வந்துள்ள நிலையில், மாணவி எப்போதும் சோகமாக இருந்ததை கண்டு பெற்றோர் தீவிரமாக விசாரித்துள்ளனர். அப்போதுதான் வேறு வழியின்றி தனக்கு நேர்ந்த கொடூரத்தை பெற்றோரிடம் சொல்லி அழுதுள்ளார். இதனால் வேதனை அடைந்த பெற்றோர் இது குறித்து ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரை ஏற்றுக் கொண்ட போலீசார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முனியாண்டி மற்றும் சந்திரனை போக்சோ சட்டதின் கீழ் கைது செய்தனர். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.