மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ரேசன் அரிசி கடத்தலை தடுப்பதற்காக தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்களை குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தொடர்ச்சியாக கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், மதுரை திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடி அருகே கேரளாவிற்கு லாரியில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, அப்பகுதியில் காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில், சந்தேகத்திற்குரிய வகையில் வந்த லாரியை நிறுத்தி காவல்துறையினர் சோதனையிட்டனர். அப்போது, லாரியில் 300மூடைகளில் 50 கிலோ வீதம் வைக்கபட்டிருந்த 15டன் ரேசன் அரிசியை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தினார். தொடர்ந்து, லாரியை ஒட்டி வந்த கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியை சேர்ந்த வில்சன், உதவியாளர் ஆசிஸ் ஆகியோரை கைது செய்த நிலையில், முக்கிய குற்றவாளிகளான கமுதியை சேர்ந்த சசிக்குமார், கன்னியாகுமரியை சேர்ந்த வேலாயுதம் என்பவரும் தலைமறைவாக உள்ளனர்.
இது குறித்து, வழக்குப்பதிவு செய்து குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் குறித்தும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

