உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என ரஷ்ய அதிபர் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, பல மாதங்களாக பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்த மக்கள் தங்களுக்கான உணவுகளை சேகரிக்கத் தொடங்கியுள்ளனர்.
ரஷ்யா – உக்ரைன் இடையே போர் தொடங்கி எட்டு மாதங்களுக்கும் மேலாகிறது. கிரிமியா பாலத்தின் மீதான தாக்குதலுக்குப் பிறகு ரஷ்யாவின் பதிலடி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால், உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என்ற ரஷ்யாவின் மிரட்டலுக்குப் பிறகு உக்ரைன் உட்பட உலகம் முழுவதும் பீதி ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மக்கள் தங்களுடைய பாதுகாப்பிற்காக பதுங்கு குழிகளைக் கட்டி வருகின்றனர். மறுபுறம், உணவுப் பொருட்களை திரட்டி வருகின்றனர். ஒருவேளை விளாடிமின் புடின் கூறியபடி ரஷ்யா அணுகுண்டு தாக்குதல் நடத்தினால், 1945-ம் ஆண்டு ஜப்பானில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியதால் நிகழ்ந்த அழிவு மீண்டும் நடைபெற வாய்ப்புள்ளது. ஒருவேளை ரஷ்யா அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் அதற்கான விலையை கொடுக்க நேரிடும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தறபோது உக்ரேனியர்கள் பல மாதங்களுக்கு தேவையான உணவை சேமித்து வைத்துள்ளனர். கீவ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல நகரங்களில் உள்ள உணவுக் கடைகள் கிட்டத்தட்ட காலியாக இருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ரஷ்யாவுடன் கிரிமியாவை இணைக்கும் பாலத்தின் மீது செப்டம்பர் 8-ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு மாஸ்கோ தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இந்த பாலத்தின் மீதான தாக்குதலுக்கு பழிவாங்கும் ரஷ்யா, உக்ரைனின் தலைநகர் கீவ் உட்பட அதன் பல நகரங்கள் மீது ஏவுகணைகளை வீசியது. உக்ரைனின் கூற்றுப்படி, ரஷ்யா 24 மணி நேரத்தில் 75 ஏவுகணைகளை வீசியது, அதில் 41 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியது.
முன்னதாக, உக்ரைனின் நான்கு பகுதிகள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட பின்னர், உக்ரேனிய இராணுவம் புதுப்பிக்கப்பட்ட வீரியத்துடன் அதன் பிரதேசங்களை ஒவ்வொன்றாக மீட்டெடுக்கத் தொடங்கியது. உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தனது படைகள் கெர்சனில் மேலும் மூன்று பகுதிகளை விடுவித்ததாகக் கூறினார். கெர்சனின் பல பகுதிகளில், உக்ரேனிய இராணுவம் முன்னேறியது. டோனெட்ஸ்கில் உக்ரேனிய இராணுவம் ரஷ்யாவை கிழக்கு நோக்கி தள்ளியது.