விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஊர்வலத்திற்கு தயாரக இருந்த விநாயகர் சிலையின் சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்ததில் 2 பேர் பலியாகினர். மேலும் மின்சாரம் பாயந்ததில் 2 பேர் காயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ளது சொக்கநாதன்புத்தூர். இந்த ஊரில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக விநாயகர் சிலை வைக்கப்பட்டு, ஊர் பொதுமக்கள் வழிபாடுகள் செய்து வந்தனர். நாளை, இங்குள்ள விநாயகர் சிலையை கரைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. சிலையை கொண்டு செல்லும் போது, அருகில் இருக்கும் மரக்கிளையில் உரசி விடக்கூடாது என்பதற்காக நேற்றிரவு, சிலை வைக்கப்பட்டிருந்த சப்பரத்தை அந்தப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் இடம் மாற்றி வைக்க முயற்சி செய்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்த சப்பரத்தில் இருந்த டிஜிட்டல் பேனரின் கம்பி, உயர்அழுத்த மின்சார வயரில் உரசியது. இதில் சப்பரத்தை பிடித்திருந்தவர்கள் மீது மின்சாரம் தாக்கியது. இந்த விபத்தில் முனீஸ்வரன் (24), மாரிமுத்து (33), செல்லப்பாண்டியன் (42), செல்வகிருஷ்ணன் (32) ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள், காயமடைந்த 4 பேரையும் மீட்டு தென்காசி மாவட்டம் சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் முனீஸ்வரன், மாரிமுத்து இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து சேத்தூர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விநாயகர் சிலை ஊர்வலம் நடக்க இருந்த நிலையில், சிலை இருந்த சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்தப்பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.