சேது சமுத்திர திட்டம் என்பது பாக் ஜலசந்தியும் மன்னார் வளைகுடாவும் இணைக்கும் ஆடம்ஸ் பாலத்தின் குறுக்கே வெட்டப்பட வேண்டிய கால்வாயின் பெயராகும். இந்த திட்டத்தினால் தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரமும் பொருளாதாரமும் பல மடங்கு உயரும் என்பது ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்து.
1860ம் ஆண்டு கப்பல்கள் செல்வதற்காக தோணி துறை அமைப்பதற்காக கமாண்டர் ஏ.டி.டைலர் யோசனை தெரிவித்தார். அதாவது கப்பல்கள் செல்வதற்கு வங்கக் கடலையும் இந்து மகாசமுத்திரத்தையும் ஒன்றிணைக்கலாம் என்பதே அவரின் யோசனையின் சாரம்சம். தற்போது பேசுபொருளாகியிருக்கும் சேது சமுத்திரத் திட்டம்தான் ஏ.டி,டைலரின் யோசனைக்கு முன்னோடியாகும்.
இந்த யோசனையை ஏற்றுக்கொண்ட அரசு 1862 முதல் 1884 வரை என பல்வேறு கால கட்டங்களில் கடல்பகுதியில் பாதை அமைக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பின்ன 1902ம் ஆண்டு தென்னிந்திய ரயில்வே நிறுவனம் 60 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய திட்டத்தை தொடங்கியது. ஆனாலும் நிர்வாகக் காரணங்களால் அந்த திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
பின்னர் இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்ட மத்திய அரசு 1955ம் ஆண்டு ராமசாமி முதலியார் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை தூத்துக்குடி மேம்பாட்டு திட்டத்திற்காக உருவாக்கியது. அதன் பின்னர் தூத்துக்குடியில் துறைமுகம் கட்டுவதற்கு 1959ம் ஆண்டு மத்திய அரசு நிதி ஒதுக்கியது. இதில் சேது சமுத்திர திட்டமும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி 1975ம் ஆண்டு மத்திய அரசு இந்த சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்தாமல் கைவிரித்து விட்டது. பின்னர் தூத்துக்குடி துறைமுக தலைவர் சுந்தர் சிங் தலைமையில் 110 கோடி ரூபாய் செலவில் புதிய திட்டத்தை 1980ம் ஆண்டு உருவாக்கினார்.
இந்நிலையில் 1986ம் ஆண்டு சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. பின்னர் இந்த திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்டிய மத்திய அரசு 2004ம் ஆண்டு 2 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியது. இதற்காக சேமு சமுத்திரக் கழகம் உருவாக்கப்பட்டது.
2005ம் ஆண்டு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கமிட்டி 2427 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சேமு சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற ஒப்புதல் அளித்தது. பின்னர் சேதுக் கால்வாய் தோண்டும் பணிகள் தொடங்கியது. மன்னார் வளைகுடாவையும் பாக். ஜலசந்தியையும் இணைக்கும் இந்த திட்டத்திற்காக கடலுக்கடியில் ராமர் கட்டிய பாலம் இடிக்கப்படுவதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் 2005ம் ஆண்டு சூயஸ் கால்வாய் ஆணையத்துடன் சேது சமுத்திரக் கழகம் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.
இதற்கிடையே கடலுக்கடியில் உள்ள ராமர் பாலத்தை சேதப்படுத்தாமல் சேது சமுத்திரத் திட்டம் செயல்படுத்த வேண்டுமென 2006ம் ஆண்டு சுப்பிரமணிய சாமி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த திட்டத்திற்காக அமைக்கப்பட்ட நிபுணர் குழுவையும் கலைக்க வேண்டுமென அவர் தாக்கல் செய்து மனு 2007ம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் 2008ம் ஆண்டு ராமர் பாலம் இந்து மக்களின் வழிபாட்டுத் தலம் அல்ல என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதையடுத்து மாற்று வழியில் அதாவது தனுஷ்கோடி வழியே இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய 2010ம் ஆண்டு நிபுணர் குழு அமைக்கப்பட்டது.
இதற்கிடையே இதுகுறித்து தற்போது நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசி மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், நம்பிக்கை என்பது வேறு, அறிவியல் என்பது வேறு புராணக் கதைகள் வரலாறு ஆகாது என தெரிவித்தார். மேலும் 18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டியதாக கூறப்படும் ராமர் பாலம் கடலில் இல்லை என்பதை செயற்கைக் கோள் புகைப்படங்களும் உறுதி செய்வதாக தெரிவித்தார்.
இதற்கிடையே தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை கொண்டு வந்த முதலாமைச்சர் மு.க.ஸ்டாலின் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த தீர்மானத்திற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்குக் கடல் பகுதிகளுக்கு இடையேயான கப்பல் போக்குவரத்து தூரம் 424 கடல் மைல்அளவுக்குக் குறையும். இதன் மூலம் கிட்டத்தட்ட 25 முதல் 30 மணி நேர பயணம் மிச்சமாகும்.
வெளிநாட்டுக் கப்பல்கள் இலங்கையை சுற்றி இந்திய துறைமுகங்களுக்கு வருவதற்குப் பதில் நேரடியாக இந்திய கடல் எல்லை வழியாகவே இந்தியத்துறைமுகங்களுக்கு வர முடியும்.