சிவகாசி அருகே மது குடித்துவிட்டு பாலத்தில் படுத்திருந்தவர் ஓடை நீரில் தவறி விழுந்து புரோட்டா மாஸ்டர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள எம்.புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (40). இவர் சிவகாசியில் உள்ள ஒரு உணவகத்தில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். மதுப்பழக்கம் உள்ள பாண்டியன் நேற்று, மது போதையில் சிவகாசி – சுக்கிரவார்பட்டி சாலையில் உள்ள பாலத்தில் படுத்திருந்தவர், திடீரென்று பாலத்திலிருந்து தவறி ஓடைக்குள் விழுந்து விட்டார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த திருத்தங்கல் காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று பாண்டியனின் உடலை மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.