பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பிள்ளை. இவரது கணவர் பெருமாள் காலமான நிலையில் தன்னுடைய மூத்த மகனுடன் வசித்து வருகிறார். விவசாய கூலித் தொழில் செய்து வந்த சின்னப்பிள்ளையின் சேமிப்புகளை திருப்பித் தராமல் தனியார் நிதி நிறுவனங்கள் ஏமாற்றி விட்டதால் களஞ்சியம் என்ற சுய உதவிக் குழுதான் சின்னப்பிள்ளைக்கு நம்பிக்கையை கொடுத்தது.
இது மட்டுமின்றி வறுமை, கந்துவட்டி கொடுமை உள்ளிட்ட சமூக அவலங்களில் இருந்து மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வரக் காரணமும் சின்னப்பிள்ளைதான். இந்த சாதனைக்காக கடந்த 2001 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த சுய உதவிக் குழுக்களின் அடையாளமாகத் திகழும் மதுரை சின்னப்பிள்ளைக்கு ஸ்ரீ சக்தி புரஸ்கார் மாதா ஜீஜாபாய் விருது வழங்கப்பட்டது.
அந்த விருதை வழங்கிய அப்போதைய பிரதமர் வாஜ்பாய், சின்னப்பிள்ளையின் காலில் விழுந்து வழங்கினார்.
இதனால் ஒட்டுமொத்த இந்தியாவும் சின்னப்பிள்ளையை திரும்பிப் பார்த்து. அதன் பிறகு மும்பையில் பஜாஜ் நிறுவனம் சின்னப்பிள்ளைக்கு பஜாஜ் ஜானகி தேவி புரஸ்கார் விருதை வழங்கியது.
கடந்த 2018ல் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அவருக்கு ஔவையார் விருது வழங்கினார். 2019ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சின்னப்பிள்ளைக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார்.
இந்நிலையில் பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை வாடகை வீட்டில் வசித்து வருவதாக சில நாட்களுக்கு முன்னர் தனியார் தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானது. மேலும் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் உறுதி அளித்தபடி தனக்கு வீடு வழங்கவில்லை வேதனை தெரிவித்திருந்தார் சின்னப்பிள்ளை. இந்த செய்தி அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சின்னப்பிள்ளைக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் அவருக்கு வீடு வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த வீட்டின் மொத்த பரப்பளவு 380 சதுர அடி ஆகும். ஏற்கெனவே 1 சென்ட் இடம் உள்ள இடத்தில் மேலும் 380 சதுர அடி சேர்த்து சின்னப்பிள்ளைக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டி தருமாறு மதுரை ஆட்சியருக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதை அடுத்து மதுரை கிழக்கு தாசில்தார் பழனிகுமார் வீடு வழங்கும் ஆணையையும், நிலத்திற்கான பட்டாவையும் சின்னப்பிள்ளையிடம் வழங்கினார். ஏற்கனவே அரசு வழங்கிய ஒரு சென்ட் வீட்டு மனையுடன் 380 சதுர அடி நிலத்திற்கான பட்டா வழங்கப்பட்டது
கலைஞர் கனவு திட்டம் இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டம் வரும் 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம்தான் அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
————————————————————————————-
செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய வாட்ஸ் சானலில் இணையுங்கள்.
https://whatsapp.com/channel/0029VaHVNkh1CYoN460xBg2N
எங்களது வாட்ஸ்செய்தி செய்தி குழுவில் இணைய 7871725717 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் நியூஸ் என மெசேஜ் அனுப்புங்கள். தனிப்பட்ட முறையில் செய்திகள் உங்களை வந்து சேர எங்களுடைய செல்போன் எண் 7871725717 உங்கள் செல்போனில் சேமித்து வைத்து நியூஸ் என வாட்ஸ்அப் மெசேஜ் செய்யவும்.
உங்கள் ஊரில் நடக்கும் நிகழ்ச்சிகளை எங்களது இணையதளத்தில் பதிய செய்திகளை udhayatoday@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பலாம்.