வெளிநாடு சென்று திரும்பிய கணவன், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை நடுரோட்டில் வெட்டி படுகொலை செய்த சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் மருத்துவமனை செவிலியரான சூர்யா என்ற இளம்பெண் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சரஸ்வதி வாசக சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்திசையில் இருசக்கர வாகனத்தில் வந்த அவரது கணவர் பிரபாகரன் சூர்யாவின் மீது மோதி அவரை கீழே தள்ளிவிட்டார்.
பின்னர் பிரபாகரன் தன்னுடைய பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவி சூர்யாவை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தார். இதைத்தொடர்ந்து பிரபாகரன் தேவகோட்டை நகர போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சூர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதல் கட்ட விசாரணையில், வெளிநாட்டிற்கு வேலை சென்றுவிட்டு திரும்பிய பிரபாகரனுக்கு மனைவி சூர்யாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் இந்த கொலை நடந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.