தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவரது மகன் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்ட விரோத பணம் பரிவர்த்தனை தொடர்பாக அண்மையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
தற்போது அவர் மருத்துவமனையில் ஓய்வு எடுத்து வருகிறார். இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்தது சட்டவிரோதம் என்று கூறி அவரது மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பளித்தனர்.
இதையடுத்து மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். அவர் அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்து சட்டவிரோதம் இல்லை என்று தீர்ப்பு கூறி மேகலாவின் ஆட்கொணவு மனுவை தள்ளுபடி செய்தார்.
இந்தநிலையில் யாரும் எதிர்ப்பாக்காத நிலையில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் இன்று அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள அவரது வீடு, அலுவலகங்களிலும், விழுப்புரம் சண்முகபுர காலனியில் உள்ள வீடு, அலுவலகங்களிலும் இந்த சோதனை நடந்து வருகிறது. மேலும் பொன்முடியின் மகனும் கள்ளக்குறிச்சி எம்பியுமான கெளதம சிகாமணி வீடு, அலுவலங்களிலும் இந்த சோதனை நடந்து வருகிறது.
காலை முதல் 5 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்புடன் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
பெங்களூருவில் இன்று நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ள நிலையில் அமைச்சர் பொன்முடி வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருவது திமுக மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.