குடித்துவிட்டு தகராறு செய்த கணவனை, இளம்பெண் தனது தந்தையுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நெய்வேலியில் உள்ள திடீர் குப்பத்தில் ராமமூர்த்தி, சந்தியா தம்பதி வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான ராமமூர்த்தி அடிக்கடி தனது மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சந்தியா தனது 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனது தந்தை வீடான செம்மாங்குப்பத்திற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் செம்மாங்குப்பத்திற்கு சென்ற ராமமூர்த்தி தான் திருந்திவிட்டதாகக் கூறி சந்தியாவை வீட்டிற்கு அழைத்துள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில் சந்தியாவும், அவரது தந்தையும் அங்கிருந்த கயிறை எடுத்து ராமமூர்த்தியின் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த முத்தாண்டிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து ராமமூர்த்தியை கொலை செய்ததை ஒப்புக் கொண்ட சந்தியாவும், அவரது தந்தையும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கணவனை, தந்தையுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 2 குழந்தைகளின் நிலைதான் பரிதாபமாக உள்ளது.