கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் சீக்கிரமே கோடீஸ்வரர் ஆகலாம் என்று நம்பிய மக்கள் பணத்தை இழந்த சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த அர்ஜூன் கார்த்தி என்பவர் தொழிலதிபராக உள்ளார். இவர் கிரிப்டோகரன்சியில் குறைந்த முதலீடு செய்து சீக்கிரமே பல மடங்கு பணம் சம்பாதிக்கலாம் என பொதுமக்களிடம் விளம்பரம் செய்துள்ளார். இவரை நம்பிய திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்த சாகுல் அமீது என்பவர் தலைமையில் ஏராளமானோர் மூன்றரை கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர்.
ஆனால், வெயில், மழை என பாராது உழைத்து சேர்த்து முதலீடு செய்த பணம் முதிர்வு தேதி முடிந்த பிறகும் பணம் பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை. தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதலீட்டாளர்கள் அர்ஜுன் கார்த்தி மீது திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அர்ஜூன் கார்த்தி இதுவரை சுமார் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாகவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.