ஏழை எளிய மக்களைக் காப்பாற்ற வேண்டுமானால் பாஜக மீண்டும் ஒரு முறை ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் அனைத்துக் கட்சிகளும் மிகத்தெளிவாக இருக்கிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பாட்னாவில் நடைபெற்ற மதச்சார்பற்ற கட்சிகளின் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
மதச்சார்பற்ற கட்சிகளின் ஒற்றுமைதான் தமிழ்நாட்டில் அடைந்த அனைத்து வெற்றிக்கும் காரணமாக அமைந்துள்ளது.
அதேபோல் அகில இந்திய அளவிலும் ஒற்றுமைதான் முக்கியம் என்பதை நான் வலியுறுத்தி வற்புறுத்தி எடுத்துச் சொன்னேன். உதாரணமாக எந்த மாநிலத்தில் எந்தக் கட்சி செல்வாக்குடன் இருக்கிறதோ அந்தக் கட்சி தலைமையில் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம் என குறிப்பிட்டு பேசினார்.
இந்தியாவின் ஜனநாயகத்தை – மக்களாட்சியை – மதச்சார்பின்மையை – பன்முகத்தன்மையை – ஒடுக்கப்பட்ட மக்களை – ஏழை எளிய மக்களைக் காப்பாற்ற வேண்டுமானால் பாஜக மீண்டும் ஒரு முறை ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் அனைத்துக் கட்சிகளும் மிகத்தெளிவாக இருக்கிறோம் எனவேதான் பாஜகவை வீழ்த்துவதை அனைத்துத் தலைவர்களும் ஒற்றை இலக்காகக் கொண்டு இருக்கிறார்கள் என பேசினார்.